×

பராமரிப்பு பணிக்காக ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் 41 கடைகளுக்கு சீல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ராசிபுரம், நவ.21: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, பழுதடைந்த நிலையில் இருந்த 41 கடைகளுக்கு ஆணையாளர் நேற்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான 100க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கட்டிடங்கள், கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. 45 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த கட்டிடங்கள்  சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு மாறியது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம், பழுதடைந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்தது. தொடர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ள 41 கடைகளை காலி செய்யுமாறு, குத்தகை எடுத்த வியாபாரிகளுக்கு, நகராட்சி சார்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.  ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதையடுத்து வரும் 20ம் தேதி பழுதடைந்த கட்டடத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நேற்று, நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 41 கடைகளுக்கு சீல் வைக்க சென்றனர். முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றனர். பின்னர், பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டிய கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் அலுவலர்கள் சீல் வைத்தனர். விரைவில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : shops ,Rasipuram ,
× RELATED தினசரி மார்க்கெட் செயல்பட தொடங்கியது