×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. காலை தொடங்கி, நள்ளிரவு வரை வலம் வந்த பஞ்ச ரதங்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான நேற்று ேதர் திருவிழா நடைபெற்றது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, மாட வீதயில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த ஐந்து தேர்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பஞ்ச ரதங்களின் மாட வீதியுலா தொடக்கமாக, சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் தேர் புறப்பாடு காலை 6.40 மணிக்கு நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மாட வீதியை வலம் வந்த விநாயகர் தேர், காலை 10.10 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் காலை 10.25 மணியளவில் புறப்பட்டு, மாட வீதியில் பவனி வந்து மதியம் 2.20 மணிக்கு நிலையை அடைந்தது. அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பெரிய தேர், சுவாமி தேர் என அழைக்கப்படும் ‘மகாரதம்’ பகல் 2.20 மணிக்கு பவனி தொடங்கியது. அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்திப் பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலித்த மகாரதம் பவனி வந்தது. அப்போது, மங்கள இசை முழங்க, தூப தீபாராதனையுடன் மாட வீதியில் பவனி வந்த மகாரதத்தின் மீது அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்து மலர்களை தூவி பக்தர்கள் வணங்கினர். முன்னதாக, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, டிஐஜி வனிதா, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், அதிமுக மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் உள்ளிட்டோர் மகாரதத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

மாட வீதியில் பவனி வந்த மகாரதம், இரவு 7.30 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது. அலங்கார ரூபத்தில் தேரில் பவனி வந்து பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் ேதரை வழக்கப்படி பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதியில் பவனி வந்தது. தேரோட்டத்தின் போது, மருத்துவக்குழுவினருடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், அதிநவீன சுழல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு போலீஸ் வாகனம் ஆகியவை தேர்களை பின்தொடர்ந்து சென்றன.

தேரோட்டம் நடைபெற்ற மாட வீதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் மூலம், போலீசார் கண்காணித்தனர். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்மன் தேரோட்டத்தின் போது, 300க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு முதன்முறையாக, கார்த்திகை தீப தேர்திருவிழாவுக்கு மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. மேலும், நகருக்குள் கனரக வாகனங்களை போலீசார் அனுமதிக்காமல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Thiruvannamalai Karthikai ,devotees ,Deepathirivai Kolakallam ,darshan ,millions ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...