×

செய்யாறு அருகே பரபரப்பு விவசாயி ஓட, ஓட விரட்டி கடப்பாரையால் குத்திக்கொலை உறவினர்கள் திடீர் சாலை மறியல்

செய்யாறு, நவ.21: செய்யாறு அருகே விவசாயி ஓட, ஓட விரட்டி கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வடதண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விநாயகமூர்த்தி (33), விவசாயி. இவரது மனைவி உமா(27). இவர்களது மகள்கள் சந்தியா(8), ஹாசினி(7). இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் விநாயகமூர்த்தி வீட்டில் இருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு அருகாவூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில நேற்று காலை இவர்களது நிலத்தின் அருகே உள்ள சீனிவாசன் என்பவரின் நிலத்தின் கிணற்றின் அருகே ரத்த வெள்ளத்தில் விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், பிரபு மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் அவரது தலையில் கடப்பாரையால் குத்தப்பட்ட அடையாளம் காணப்பட்டது. சடலத்தின் அருகே ரத்தக்கறை படிந்த கடப்பாரை, ரத்தம் கறையுடன் கற்களும் இருந்தது. அவரை கொலையாளிகள் ஓட ஓட விரட்டி கடப்பாரையால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்து உள்ளனர். இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விநாயகமூர்த்திக்கும், அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான சீனிவாசனுக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். இதுதொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர். இந்நிைலயில் விநாயகமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் காஞ்சிபுரம் சாலையில் உள்ள செய்யாறு அரசு மருத்துவமனை முன்பும், ஆற்காடு சாலையிலும் கொலையாளியை விரைவில் பிடிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தாசில்தார் மகேந்திரமணி, இன்ஸ்பெக்டர் சுதாகர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளியை விரைவில் பிடிப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயியை ஓட ஓட விரட்டி கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Cheeru ,
× RELATED செய்யாறு, ஆரணி, கலசபாக்கத்தில்...