சடலத்துக்கு தையல் போடாத விவகாரம் அரசு தலைமை மருத்துவருக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு சம்மன்

மணப்பாறை, நவ.20:  திருச்சி  மாவட்டம் வையம்பட்டி ரயில் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி 50 வயது  மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.  திருச்சி ரயில்வே போலீசார் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யாரும் சடலத்தை அடையாளம் காணவரவில்லை. அதையடுத்து செப். 25ம்  தேதி பிரேத பரிசோதனை முடிந்து, சடலம் ரயில்வே போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டது. அனாதை பிரேதங்களை  இலவசமாக அடக்கம் செய்து வரும் மணப்பாறையை சேர்ந்த அரிமா சங்கத்திடம் உடலை போலீசார் ஒப்படைத்தனர். மணப்பாறை நகராட்சி சுடுகாட்டுக்கு சடலம்  கொண்டு செல்லப்பட்டதும், அங்குள்ள பணியாளர்கள் புதைப்பதற்கு முன்  சடலம் மீது சுற்றியிருந்த பிளாஸ்டிக் பையை அகற்றினர். அப்போது உடல்  தைக்கப்படாமல் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் வெளியே தெரிந்தது.

 இதுபற்றிய செய்தி சமூக  வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக மணப்பாறை அரிமா சங்க  நிர்வாகி தரன், சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு  புகார் மனு அனுப்பினார். இதற்கிடையே  அனாதை சடலம் என புதைக்கப்பட்டது மணப்பாறை வாகைக்குளம்  விஸ்தரிப்பு கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி  நல்லதம்பி(46) என அடையாளம் தெரிந்தது. இந்நிலையில் தரன்  அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி திருச்சி மாவட்ட சட்ட பணிகள்  ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக  விசாரணை நடத்துவதற்காக திருச்சி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு, புகார்தாரர்  அரிமாசங்க நிர்வாகி தரன், மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை  மருத்துவர் முத்துகார்த்திக்கேயன், திருச்சி மாவட்ட குடும்பநல  மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சம்ஷாத் பேகம் ஆகியோர் வருகிற  26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விட்டுள்ளது.

Related Stories: