திருச்சியில் டாஸ்மாக் சூபர்வைசரை தாக்கி ரூ.1.77 லட்சம் பறித்த வழக்கில் 5 பேர் கைது கரூரிலும் 3 பணியாளர்களிடம் கொள்ளையடித்தது அம்பலம்

திருச்சி, நவ. 20:  திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த அரியாவூர் ஒத்தக்கடையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூபர்வைசராக திரவியம் என்பவர் உள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி மது விற்பனை பணம் ரூ.1.77 லட்சத்தை பையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பைக்கில் சென்றார். தாயனூர் சந்தை அருகே சென்ற போது பைக்கை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் திரவியம் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவரிடமிருந்த ரூ.1.77 லட்சத்தை பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுண்ணாம்புக்காரன்பட்டியில் சோமரசம்பேட்டை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் சந்தேகப்படும்படி வந்த 5 பேரை பிடித்து ஆவணங்களை கேட்டனர். அப்போது 5 பேரும் முன்னுக்குபின் முரணாக கூறியதால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஐந்து பேரும் சோமரசம்பேட்டை அடுத்த முதலைப்பட்டி கீழ்மேட்டைச் சேர்ந்த ஜெயகாந்தன் (22), கோடி மேலத்தெருவை சேர்ந்த அசோக்குமார் (23), கருங்கல்பட்டி சுரேஷ் (24), சுப்ரமணி (25), சுப்புராயன்பட்டி சங்கர் (எ) சங்கப்பிள்ளை(27) என்பதும், சம்பவத்தன்று டாஸ்மாக் சூபர்வைசர் திரவியத்தை தாக்கி ரூ.1.77 லட்சம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வழக்குபதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 5 பேரும் கரூர் மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகளில் வசூல் பணத்தை இதேபோல் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதில் ஜெயகாந்தன் என்பவர் கடந்தாண்டு பைனான்ஸ் அதிபரை கொன்று உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடலை புதைத்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரையும் கரூர் கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories: