மணப்பாறை அருகே பரபரப்பு கஜா புயலால் பாதித்த இடங்களில் எம்எல்ஏ ஆய்வு

திருவெறும்பூர், நவ.20:  திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கஜாபுயலால் திருவெறும்பூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவித் தொகை வழங்கினார். கஜாபுயல் காரணமாக திருச்சி மாவட்டமும் பாதிக்கப்பட்டது. 4 நாட்களாகியும் திருவெறும்பூர் பகுதிகளான அண்ணாநகர், காந்தலூர், இலந்தைப்பட்டி, அசூர், தெற்கு தேனீர்பட்டி, பெரியசூரியூர், சின்னசூரியூர் பகுதிகளில் இன்னும் முழுமையாக மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. இந்நிலையில் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யமொழி நேற்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி வழங்கினார். துவாக்குடி துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சவாரிக்கு சென்ற ஆட்டோமீது மரம் விழுந்து உயிரிழந்த நவல்பட்டு பர்மா காலனியை சேந்த துரைசாமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் சாய்ந்த மின்கம்பங்களை பார்வையிட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்களிடம் பணிகளை முடித்து விரைந்து மின்சாரம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இலந்தப்பட்டி, காந்தலூர் பகுதியில் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2,500 நிதியும், அசூர் தெற்கு தேனீர்ப்பட்டியில் மரம் விழுந்து இறந்த மாட்டின் உரிமையளர் சிவக்குமாருக்கு ரூ.2,500ம் வழங்கினார். மேலும் 4வது நாளாக இருளில் மூழ்கி கிடக்கும் நவல்பட்டு அண்ணாநகர், காந்தலூர், இலத்தைப்பட்டி, அசூர், தெற்குதேனீர் பட்டி, பெரிய சூரியூர், சின்ன சூரியூர் பகுதிக்கு விரைந்து மின்சார வசதி செய்து கொடுக்க மின்சார வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் சின்ன சூரியூர் பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் ஜெனரேட்டர் மூலம் போர்வெல் மின்சார மோட்டார் இயக்குவதை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கஜா புயல்கோரதாண்டவம் திருச்சி மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் புயல்காற்றில் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளது. அதனால் நவல்பட்டு அண்ணாநகர், பெரியசூரியூர், சின்னசூரியூர், அசூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் முறிந்து மின்சாரம் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. இதனை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை.  மேலும் சில பகுதிகளில் தண்ணீர் மற்றும் அரிசி இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி வெள்ள நிவாரண பொருட்கள் கலைஞர் அறிவாலயத்திற்கு திருவெறும்பூர் பகுதி மக்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சித்திரவேல், நிர்வாகிகள் கங்காதரன், சண்முகம், மாரிமுத்து, பரமசிவம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். திருவெறும்பூர் தொகுதி மக்கள் சார்பில், கைலி, சோலை, நாப்கின், பேஸ்ட், பிரஷ், டெட்டால் தலா 100ம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் தலா ஆயிரம், போர்வை, சோப் தலா 200, 250 பாய்கள், 300 மாத்திரைகள், 25 டார்ச்லைட்டுகள், 50 குடம், 30 சிப்பம் அரிசி உள்ளிட்ட பொருட்களை திருவெறும்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து லோடு ஆட்டோ மூலம் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தார். நிவாரண உதவிகள் வழங்கினார்

Related Stories: