திருச்சி அருகே கோயில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம் சிலைகள், நகைகள் தப்பியது

மண்ணச்சநல்லூர்,  நவ.20:  திருச்சி கோயிலில் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதனால் ரூ.1கோடி மதிப்பிலான சிலைகள், நகைகள் தப்பியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற சுத்தரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  இந்த கோயிலில் பாதுகாப்பு  பெட்டக வசதி உள்ளது. அருகில் உள்ள திருப்பட்டூர்,  நம்முகுறிச்சி, தெரணிபாளையம் உள்பட பல கோயில்களின் நகைகள் பாதுகாப்பு கருதி இந்த கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.15  மணியளவி–்ல் ஊட்டத்தூர் கோயிலில் திடீரென அலாரம் ஒலித்தது. இதனால் கோயிலை  சுற்றியுள்ள குருக்கள் மற்றும் ஊர் மக்கள் பதறி அடித்துக் கொண்டு கோயிலுக்கு  வந்தனர். கோயிலை  திறந்து உள்ளே சென்றனர். அப்போது பின்புற மதில்சுவரில்  உள்ள சுதைபொம்மையில் ஒரு கயிறு கட்டப்பட்டு இருந்தது. அந்த கயிறு வழியாக மர்ம  நபர்கள் உள்ளே இறங்கி இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டது.

கோயிலுக்குள்  இறங்கிய கொள்ளையர்கள் அங்குள்ள ஒரு கேட்டின் பூட்டை உடைத்து பெட்டக அறையை கண்டுபிடித்து அதனை கடப்பாரையால்  உடைத்துள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் கடப்பாரையை  அங்கே போட்டு விட்டு தப்பி  ஓடி விட்டனர். இக் கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள பல ஐம்பொன்சிலைகள் உள்ளன. மேலும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பல கோயில்களின் நகைகள் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அலாரம் ஒலித்ததால் இவை அனைத்தும் தப்பியது. கோயிலில்  உற்சவர் சிலை, பெட்டக அறை உள்பட 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா  பொருத்தப்பட்டு உள்ளது. கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் இந்த  கண் காணிப்பு காமிராவின் மெயின் வயரை துண்டித்து உள்ளனர். இதனால் நள்ளிரவு 1.25 மணிக்கு பிறகு அந்த காமிரா செயல்படவில்லை. எனவே கொள்ளையர்கள் நள்ளிரவு 1.25  மணிக்கு முன் கோயிலுக்குள் புகுந்து உள்ளனர். காமிரா துண்டிக்கப்பட்ட தால்  கொள்ளையர்கள் யார், எத்தனை பேர் வந்தனர் என்பது தெரியவில்லை. பெட்டக அறையில் அலாரம் பொருத்தப்பட்டிருப்பது கொள்ளையர்களுக்கு தெரியவில்லை. இல்லையென்றால் அதன் வயரையும் துண்டித்துவிட்டு கோயிலில் உள்ள ஐம்பொன்சிலைகள் மற்றும் பெட்டகத்தில் உள்ள நகைகள் கொள்ளைபோயிருக்கும். இந்த சம்பவம் குறித்து சிறுகனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி பொன்மாணிக்கவேல் அன்றே சொன்னார் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊட்டத்தூரில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஐஜி  பொன்மாணிக்கவேல், கோயிலுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு ஏற்பாடு  செய்யுங்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: