கஜா புயலால் முறிந்து சேதமான வாழைமரத்துடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை: குறைதீர்நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.20: கஜா புயலால் தாக்கிய வாழை மரங்களுடன் திருச்சி கலெக்டர் அலுவல கத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டதால் குறைதீர்நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன  விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் கஜாபுயலால் முறிந்து சாய்ந்த குலை தள்ளிய வாழைமரங்களை தூக்கிக்கொண்டு தலையில் முக்காடு போட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக போர்டிகோ முன் நின்று கொண்டு, கஜா புயலால் முறிந்து சேதமான வாழைமரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்  விவசாயிகள் கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், கஜா புயலால் வாழை மரங்கள் சேதமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் வாழை விவசாயம் செய்ய ரூ.80ஆயிரம்  வரை செலவு ஆகிறது. லால்குடி வட்டத்திலும், மண்ணச்சநல்லூர் வட்டத்திலும்,  ஏறக் குறைய 4ஆயிரம் ஏக்கர் வாழை புயலால் ஒடிந்து நஷ்டம் ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர்  வட்டத்தில் அழகிய மணவாளம், சேங்குடி, திருவரங்கப்பட்டி, கடுக்காத்துறை,  பாச்சூர், உளுந்தங்குடி, கோபுரப்பட்டி, லால்குடி வட்டத்தில் காட்டூர்  சிறு மயங்குடி, மேட்டுப்பட்டி, எசனகோரை, பூவாளூர், பின்னவாசல், திருமணமேடு,  பச்சாம் பேட்டை, மயிலரங்கம், பெரியவர்சீலி, மணக்கால், சாந்தமங்கலம் உள்ளிட்ட  கிராமங்களில் வாழை கஜா புயலால் சேதமடைந்துள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமாகா விவசாய அணி மாவட்ட  தலைவர் புங்கனூர் செல்வம் ஆகியோர் கிராம மக்களுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு கோஷங்கள் எழுப்பியபடி வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, நெல், சோளம்,  வாழை பயிர்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட  கூரை வீடுகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் நஷ்டஈடு வழங்க  வேண்டும். புங்கனூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட  வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories: