முத்தையாபுரத்தில் மின்வயரை இழுத்து சென்ற லாரி மின்சாரம் துண்டிப்பால் விபத்து தவிர்ப்பு

ஸ்பிக்நகர், நவ.20: தூத்துக்குடி அருகே ஹைட்ராலிக் ஜாக்கியை இறக்காமல் சென்ற லாரி மின் வயரை இழுத்து சென்றது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் இருந்து நேற்று மதியம் உப்பு லோடு ஏற்றிய லாரி புறப்பட்டது. அத்திமரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள உப்பு அரவை குடோனில் உப்பை இறக்கிய லாரி அங்கிருந்து வேகமாக புறப்பட்டது. அப்போது லாரியிலுள்ள ஹைட்ராலிக் ஜாக்கியை சரிவர இறக்காமல் வண்டி புறப்பட்டது. இதனால் அத்திமரப்பட்டியிலுள்ள கோழி வளர்க்கும் கூடத்திற்கு செல்லும் மின் வயரை இழுத்து சென்றது. இதனால் அங்கிருந்தவர்கள் சத்தமிட்டனர். பயந்துபோன லாரி ஓட்டுநர் வேகமாக வண்டியை செலுத்தினார்.

அப்போதும் ஹைட்ராக் ஜாக்கி இறக்கப்படாததால் அங்கிருந்த மின்கம்பத்தின் வயரை இழுத்து சென்றது. இதனால் அந்த பகுதியில் தீப்பொறி பரவியது. மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள 4 மின்கம்பங்களும் சரிந்தன. உடனடியாக மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சரிந்த 4 மின்கம்பங்களில் ஒன்று அந்த லாரியின் மீது விழுந்தது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: