×

ஆறுமுகநேரியில் குவிந்துகிடந்த குப்பைகள் அகற்றம்

ஆறுமுகநேரி, நவ. 20: ஆறுமுகநேரியில் கால்நடை மருத்துவமனை அருகே குவிந்துகிடந்த குப்பைகள், தினகரன் செய்தி எதிரொலியாக பேரூராட்சி நிர்வாகத்தால் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான பெரிய பள்ளத்தில் பேரூராட்சி பகுதியில் இருந்து சேகரித்து கொண்டுவரப்பட்ட குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டன. இதனால் குவிந்த குப்பைகளால் அப்பகுதியே குப்பை மேடானது. இதன் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 3 பெண்கள் பணியாற்றி வரும் நிலையில் குப்பைமேட்டில் குவிந்த குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவியது. குறிப்பாக குப்பைகளை தீயிட்டு எரிக்கும் போது அதில் இருந்து எழும்பும் புகையானது கால்நடை மருத்துவமனைக்குள் சென்று படிந்தது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும்   எடுக்கப்படவில்லை. மேலும், குப்பைகளை வாகனம் மூலம் கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களும் குப்பைகளை இங்கு கொட்டாதீர்கள் என்றால், அதை ஏற்கமறுக்கும் அவர்கள், இதை நிர்வாகத்தினரிடம் கூறி குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கால்நடை மருத்துவமனை பணியாளர்களுக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்கும் அடிக்கடி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதுகுறித்து தினகரனில் கடந்த 18ம் தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக  குப்பைகளை அகற்ற களமிறங்கியது.  கால்நடை மருத்துவமனை அருகில் கொட்டிய  குப்பைகள் ஜேசிபி துணையுடன் அகற்றப்பட்டன. மேலும் கால்நடை மருத்துவமனைக்கு  செல்லும் பாதையில் உள்ள புல் மற்றும் முள் செடிகளையும் அகற்றி  சுத்தப்படுத்தினர். அத்துடன் இவ்விடத்தில் குப்பைகளை கொட்டாமல்  வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான இடங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர்  பார்த்துள்ளதாகவும் தெரியப்படுத்தினர். இதனால் பொது மக்கள் கால்நடை  மருத்துவமனைக்கு சென்றுவருவதற்கான பாதை சீர்படுத்தியுள்ளதால் பொதுமக்கள்  தடையின்று வந்து செல்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும், இதற்காக குரல்கொடுத்த தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...