தூத்துக்குடி ஸ்ெடர்லைட் ஆலையில் தாமிர தாதுக்களை அகற்றும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும்

தூத்துக்குடி, நவ. 20: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாது உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அகற்றும் பணி  இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என  கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் ஆய்வுநடத்தி வருகின்றனர். இழப்புக்கான நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இம்மாதத்தில் மாவட்டம் முழுவதும் கொசுப்புழு கண்டறியப்பட்ட நிறுவனங்கள், வீடுகளின்  உரிமையாளர்களுக்கு என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த  எச்சரிக்கை வந்தால், விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, அவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். முக்கியமாக எந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்பது குறித்து அறிக்கைகள் வருகிறது. இதனை மீனவர்களிடம் கொண்டு சேர்ப்பது நமது பொறுப்பு. அதனை மீனவர்கள் புரிந்து கொண்டு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி மேற்கொள்வதற்காக மீட்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் புயல் பாதிப்புக்கான  நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையமும் மாவட்டத்தில்  அமைக்கப்பட்டுள்ளன. மின்கம்பங்களை சீரமைப்பதற்காக இங்கிருந்து  கிரேன்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டுவதற்கான நவீன எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மீட்பு குழுவை அனுப்புகிறோம்.  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம், ராக்பாஸ்பேட், தாமிர தாதுக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 15,613 டன் ஜிப்சம், 6, 127 டன் ராக்பாஸ்பேட் அகற்றப்பட்டு உள்ளது. ராக்பாஸ்பேட் 90 சதவீத அளவுக்கு அகற்றப்பட்டு உள்ளது. தாமிர தாது உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அகற்றும் பணி  இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Related Stories: