5 ஆண்டுகளுக்கு பிறகு இருபோக சாகுபடிக்கு உழவு பணி தீவிரம்

மதுரை, நவ. 20:  முல்லைப்பெரியாறு இருபோக பாசன பகுதியில், கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாம் போக சாகுபடிக்கு உழவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு மூலம் 1 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் பாசன சாகுபடியாகும். இதில் 43 ஆயிரம் ஏக்கர் ஆண்டுக்கு இருபோகம் விளையும் பூமியாகும். முல்லை பெரியாறு பாசனம் 43 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் கடும் வறட்சியால், முழுமையாக பொய்த்து போனது. 2014, 2015, 2017ம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழை சீசனில் பெரியாறு அணையில் 142 அடி தேக்கியும் முழுமையான விளைச்சலுக்கு விமோசனம் ஏற்படவில்லை. இருபோக சாகுபடிக்கு வழியின்றி ஒருபோகம் மட்டுமே கடந்த 3 ஆண்டாக நெல் விளைவிக்க முடிந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால், பெரியாறு அணை நிரம்பி கூடுதல் தண்ணீர் வந்தது. தேவையான தண்ணீர் இருந்ததால், ஜூன் மாத இறுதியில் இருபோக பகுதியான பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் நெல் பயிர் செய்து, தற்போது முதல்போக நெல் அறுவடை முடிவுடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், வைகையில் தொடர்ந்து 69 அடி தண்ணீர் இருப்பதாலும், பெரியாறு அணையிலும் 128 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாவது போக சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இதனால், இருபோக விவசாயிகள் முதல் போக நெல் அறுவடை முடிந்தவுடன், தற்போது 43 ஆயிரம் ஏக்கரிலும் இரண்டாவது போக சாகுபடிக்காக நிலத்தை உழுது, நடவுப் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டுதான் முல்லைப்பெரியாறு பாசனப் பகுதியில் இருபோக சாகுபடி நடந்து வருகிறது. ஏற்கனவே கள்ளந்திரி முதல் மேலூர் பகுதி வரை முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: