மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் புயலால் சரிந்தது காய்கறிகள் விலை

உசிலம்பட்டி, நவ.20: கஜா புயல் தாக்கத்தால், உசிலம்பட்டி பகுதியில் காய்கறி விலை வீழ்ச்சியால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முருங்கை காய் விலை உயர்ந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் காய்கறி விலை முற்றிலும் குறைந்து போனது. இதில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை முற்றிலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் காய்கறிகள் மிகக் குறைந்த விலைக்கே வாங்கப்படுவதால், விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கஜா புயல் தாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு காய்கறி சப்ளை குறைந்து போனது. புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட சில இடங்களில் வீடுகளை இழந்து தவிக்கும் பொதுமக்கள் உள்ள பகுதியில் காய்கறிகள் முற்றிலுமே தேவையில்லாமல் போனது.இதன் காரணமாக விவசாயிகளிடம் காய்கறிகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கே வாங்குகின்றனர். சிலரிடம் வேண்டாம் எனவும் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு மனவேதனையில் உள்ளனர்.

உசிலம்பட்டி காய்கறி வியாபாரி அழகுராஜா கூறும்போது, எங்களிடம் பெரிய வியாபாரிகள் வாங்கினால்தான், நாங்கள் வாங்கிய காய்கறிகளை விற்க முடியும். அவர்களுக்கே தேவைகள் குறையும் போது, நாங்களும் முழுமையாக காய்கறிகளை வாங்கி வைத்து நஷ்டம் அடைய முடியாது. மேலும் சமீபத்தில் வந்த கஜா புயலின் தாக்கமும் காய்கறி விலை குறைந்ததற்கு முக்கிய காரணம்தான் என்றார். தருமத்துப்பட்டி விவசாயி பெரியகருப்பன், முன்பு வெண்டைக்காய் கிலோ ரூ.50 வரை விற்றது. ஆனால் இப்போது கிலோ ரூ.5க்கும், ரூ.7க்கும் வியாபாரிகள் எங்களிடம் வாங்குகின்றனர். இதனால் வெண்டைக்காயை பறிக்கும் கூலிக்கு கூட பத்தாது. வெண்ைடக்காயை வீதியில் போடமுடியாது. அதனால் சந்தைக்கு கொண்டு வந்தேன். மழை பெய்யாமல் போனாலும் புயல் வந்துட்டு போனாலும், எப்படியும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான் என்றார்.

விருவீடு காளிமுத்து கூறுகையில், நான் டூவீலரில்தான் காய்களை உசிலம்பட்டி சந்தைக்கு கொண்டு வந்தேன். இவைகளை பறித்த பெண்களுக்கு கூலி கொடுக்க கூட முடியாதபடி கிலோ ரூ.5க்கு வெண்ைடக்காயும், தட்டாண்காய் ரூ.10க்கும் விலைபோனால் எப்படி விவசாயிகள் பிழைப்பது. மேலும் தக்காளி ஒரு கூடை(15 கிலோ) ரூ.150க்கு விற்றது. இப்பகுதியில் முருங்கை மரங்கள் பெருமளவில் ஒடிந்து சேதமாகி போனது. இந்நிலையில் மகசூலை இழந்த விவசாயிகளின் நிலையில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தற்போது விற்பனை செய்யும் நிலையில் முருங்கைக்காய் இல்லை. இதுபோன்ற விலை ஏற்றத்தாழ்வும், இயற்கை பேரிடர் காலங்களிலும், தன்னம்பிக்கையை இழந்து விவசாயம் செய்ய ஆசையில்லாமல் போகிறது என்றார்.

Related Stories: