மாவட்டம் வெளியூர் செல்லும் பஸ்கள் சிவரக்கோட்டை நிறுத்தத்தில் நிற்காமல் சென்றால் நடவடிக்கை

திருமங்கலம், நவ.20: திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் அனைத்து வெளியூர் பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது சிவரக்கோட்டை. நான்கு வழிச்சாலையாக இல்லாமல் இருந்த காலகட்டத்தில் சிவரக்கோட்டையில் அனைத்து வெளியூர் பஸ்களும் நின்று சென்றன. இந்நிலையில் நான்கு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை மாறியபின்பு இங்கு டவுன் பஸ்களை தவிர்த்து வெளியூர் பஸ்கள் எதுவும் நிற்பதில்லை. இதனால் சிவரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்பிநத்தம், ராயபாளையம், நேசனேரி, செங்கபடை உள்ளிட்ட கிராமமக்கள் திருமங்கலம் அல்லது கள்ளிக்குடி சென்று வெளியூர் பஸ்களில் ஏறவேண்டியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சிவரக்கோட்டை கிராமமக்கள் பலமுறை போக்குவரத்து கழக அதிகாரிகள், தாசில்தார். டிஎஸ்பி, திருமங்கலம் ஆர்டிஓ யூனிட் அலுவலகம் என அனைத்து தரப்பிலும் புகார் கொடுத்தும் பலனின்லை.

இந்நிலையில் வெளியூர் பஸ்கள் நிற்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவோம் என சிவரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமங்கலம் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணலதா, நெடுஞ்சாலைத்துறை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்டோர் சிவரக்கோட்டையில் ஆய்வு செய்தனர். பின்னர் தனியார் மற்றும் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் இனிமேல் சிவரக்கோட்டையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவேண்டும் என அறிவுறுத்தினர்.

இங்கு நிற்பதால் உரிய நேரம் கிடைக்காது என தனியார் பஸ் ஓட்டுனர்கள் கூறியபோது, திருமங்கலத்தில் உரிய நேரத்தில் பஸ்களை எடுத்து சிவரக்கோட்டையில் பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்லுங்கள் என தெரிவித்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையை தொடர்ந்து சிவரக்கோட்டையில் வெளியூர் பஸ்கள் நின்று செல்கிறது. தொடர்ந்து நிற்காமல் சென்றால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: