அடிப்படை வசதிகள் கேட்டு பழநி யூனியன் அலுவலகம் முற்றுகை பொதுமக்கள் ஆவேசம்

பழநி, நவ. 20: அடிப்படை வசதிகள் கேட்டு பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழநி அருகே மேலக்கோட்டை ஊராட்சி வத்தக்கவுண்டன்வலசில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 3வது வார்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக மின்சாரம் அடிக்கடி துன்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதியடைகிறோம். சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட எந்தவித சுகாதார பணிகளும் எங்கள் பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து போனது. மேலும் ஒரு பெண் தற்போது பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் எங்கள் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும் மின்சார கம்பிகள் பலமிழந்து தாழ்வாக தொங்குகின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சில இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்து உள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டும். தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: