வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு தனியார் விடுதியை விவசாயிகள் முற்றுகை பழநியில் பரபரப்பு

பழநி, நவ. 20: வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழநியில் தனியார் விடுதியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் காரமடை அருகே உணவு விடுதியுடன் கூடிய தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜின்அருகில் வையாபுரி குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் ராஜா வாய்க்காலில் தனியார் லாட்ஜின் கழிவுநீர் கலப்பதாக கூறி நேற்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியார் லாட்ஜை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து  லாட்ஜ் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இனிவரும் காலங்களில் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக லாட்ஜ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி விவசாயிகள் கலைந்துசென்றனர். இதுகுறித்து வையாபுரி குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது, லாட்ஜில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ராஜ வாய்க்காலில் கலக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு அந்நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. தவிர, வாய்க்காலின் மேற்பகுதியை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடம் அமைத்துள்ளார்கள். இதனால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, வாய்க்காலை மூடியுள்ள கான்கிரீட்டை தகர்த்து விட்டு இரும்பினாலான கம்பிகளை வைத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக பழனி சார் ஆட்சியரிடமும், தாசில்தாரிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றார். இதுகுறித்து பழனி தாசில்தார் சரவணகுமாரிடம் கேட்டபோது கூறியதாவது, ‘‘வருவாய் ஆய்வாளரிடம் பிரச்னை தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய  சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: