பொதுமக்களின் நிவாரண பணத்தை பங்கு போட்டு கொள்ளலாம் என்பதே ஆளுங்கட்சியினரின் கணக்கு

கும்பகோணம், நவ. 20:  பொதுமக்களின் நிவாரண பணத்தை பங்கு போட்டு கொள்ளலாம் என்பதே ஆளுங்கட்சியினரின் கணக்காக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கு காரணம் நிவாரணம் கிடைக்கவில்லை என்பதல்ல. குடிநீர், மின்சாரம் கூட கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4 நாட்களாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அரசு முயற்சி கூட செய்யவில்லை. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுகாக்களில் உள்ள மக்களிடம் கட்டி கொண்டுள்ள துணியை தவிர வேறு இல்லை.

மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதியை தமிழக அரசு இன்னும் கேட்கவில்லை. தங்களிடம் உள்ள பணத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியினர் குறியாக உள்ளனர். இப்படியே நிலைமையை சமாளித்து விட்டால் 10 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் மறந்துவிடுவர். நிவாரணத்தை பங்கு போட்டு கொள்ளலாம் என்பது தான் ஆளுங்கட்சியின் கணக்காக உள்ளது. இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

Related Stories: