ஆர்டிஓவிடம் வாக்குவாதம் கஜா புயலால் சேதம் ஒரு ஏக்கர் வாழைக்கு ரூ.1.20 லட்சம் நிவாரணம் வேண்டும்

கும்பகோணம், நவ. 20:  வாழை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர் தருமராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் விமல்நாதன், விவசாயிகள் வரதராஜன், சாமிநாதன், துணைத்தலைவர் பிரகாசம் பேசினர்.

கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு 4 நாட்களாகியும் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட இதுவரை முன்வராமல் இருப்பதை கண்டிக்கிறோம். மத்தியக்குழு புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்து தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

தென்னை ஒன்றுக்கு ரூ.45 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம், பொங்கல் கரும்பு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம், வெற்றிலை ஒரு ஏக்கருக்கு ரூ.2.20 லட்சம், மலர் சாகுபடி ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம், காய்கறி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம், தேக்கு மரத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை முழுமையாக பாதித்த பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி மக்களுக்கு உடனேயாக 15 லிட்டர் மண்ணெண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு இணையாக புதிய தரமான வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

Related Stories: