கஜா புயல் பாதிப்பில் இருந்து அரசு இயந்திரம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

தஞ்சை, நவ. 20:  கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு இயந்திரம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டுமென திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் வலியுறுத்தினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் தென்னை, வாழைகள் சேதமடைந்துள்ளன. புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதை அறிவோம். தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டவுடன் முதன்முதலாக வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். வேதாரண்யம் துவங்கி பேராவூரணி, பட்டுக்கோட்டை என அனைத்து பகுதிகளிலும் 2 நாட்கள் நேரடியாக முகாமிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்.

பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகள், குடிநீர் சப்ளை இல்லை. அடிப்படை தேவைகளான உணவு, இடம், குடிநீர் போன்றவைகளை முன்னெச்சரிக்கையாக அரசு செய்யவில்லை என்பது தெரிகிறது. அது தொடர்ச்சியாக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் கஜா புயல் நிவாரணம் தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதில் திமுக  உறுப்பினர்கள் பங்கேற்றோம். இதில் வாழை, தென்னைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டோம். அதேபோல் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மின்சாரம் போன்றவைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். 2 நாட்களில் சீர் செய்து தருவதாக கூறியுள்ளனர். இருப்பினும் அரசு இயந்திரம் இன்னும் துரிதமாக செயல்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன் உடனிருந்தனர்.

Related Stories: