விவசாயிகள் மனு கஜா புயலால் 37,868 எக்டேரில் தென்னை மரங்கள் பாதிப்பு

தஞ்சை, நவ. 20:  தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 37,868 எக்டேரில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கஜா புயல் காரணமாக கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில்  சூறைக்காற்று வீசியது. இதில் மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் கடற்கரை பகுதிகளான அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிசை, ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் உள்ளிட்ட பணபயிர்கள் முற்றிலும் அழிந்தன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முதல்கட்ட கணக்கெடுப்பின் விவரம் தற்போது கிடைத்துள்ளது.

இதன்படி 6274 குடிசை வீடுகள் முழுமையாகவும், 11,291 குடிசை வீடுகள் பகுதியாகவும், 13,555 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேலும் வேளாண் பயிர்களான நெற்பயிர் 12,500 எக்டேர், தென்னை 37,868 எக்டேர், சோளம் 270 எக்டேர், கரும்பு 4,188 எக்டேர், எண்ணெய்பனை 20 எக்டேர், தோட்டக்கலை பயிர்களில் வாழை 1,259 எக்டேர், முந்திரி 672 எக்டேர், மரவள்ளி 333 எக்டேர், வெங்காயம் 2 எக்டேர், வெண்டை 11 எக்டேர், கத்திரி 8 எக்டேர், பாக்கு 22 எக்டேர், பலா 12 எக்டேர், கோகோ 50 எக்டேர், மா 36 எக்டேர், மிளகு 12 எக்டேர், நெல்லி 5 எக்டேர், கொய்யா 20 எக்டேர், சம்பங்கி 11 எக்டேர், கருணை கிழங்கு 6 எக்டேர், புளி 21 எக்டேர், வெற்றிலை 62 எக்டேர், எலுமிச்சை 3 எக்டேர், பந்தல் காய்கறிகள் 4 எக்டேர், நிழல்வலை கூடம் ஒரு எக்டேர், பசுமை குடில் 13 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் 191.40 கி.மீ. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் 61 விசைப்படகுகள் பகுதியாகவும், 175 விசைப்படகுகள் முழுமையாகவும், 27 நாட்டுப்படகுகள் பகுதியாகவும், 696 நாட்டுப்படகுகள் முழுமையாகவும், 194 படகுகளில் இன்ஜின் மட்டும், 517 மீன் பிடி வலைகளும் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இச்சேத விவரம் தெரியவந்துள்ள நிலையில் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்தால் மட்டுமே முழுமையான பாதிப்பு தெரியவரும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: