கும்பகோணம் நகராட்சி உயர்த்திய வரிகளை குறைக்க வேண்டும்

கும்பகோணம், நவ. 20:  கும்பகோணம் நகராட்சி உயர்த்திய வரிகளை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டுமென முன்னாள் நகர்மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரியிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சுப தமிழழகன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கும்பகோணம் நகராட்சியில் சொத்துவரி உயர்வால் பொதுமக்கள், வணிகர்கள் பாதித்துள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கும்பகோணம் நகராட்சிக்கு இதுவரை இன்ஜினியர்கள் பணி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. இந்த இடத்தை விரைந்து நிரப்பினால் தான் கும்பகோணத்தில் ரூ.100 கோடி மதிப்பில் நடைபெறும் அம்ரூத் திட்ட பணிகளை சரிவர கண்காணிக்க முடியும். அம்ரூத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட பூங்காங்களை சரிவர பராமரிக்க வேண்டும்.

தற்போது உள்ள ஆணையர், திருவாரூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக உள்ளார். ஆகவே மிகப்பெரிய நகரான கும்பகோணத்துக்கு தனி ஆணையர் நியமிக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் அதிகளவில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் தனியாரின் நிதி முதலீட்டில் புதிய வணிக வளாகம் கட்டுவதை கைவிட்டு நகராட்சியின் சொந்த நிதியில் கட்டிடம் கட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் சைக்கிள் நிறுத்தும் இடதுக்கு டெண்டர் விடாமல் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சைக்கிள் ஸ்டாண்டுக்கு உடனே டெண்டர் விட வேண்டும். கும்பகோணம் நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டிடம், திருவிடைமருதூர் சாலையில் பயனற்ற வகையில் கட்டப்படவுள்ளது. அந்த பணத்தை பயனுள்ள வகையில் அதே இடத்தில் ஒரு பயணியர் தங்கும் விடுதி கட்டினால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், வாசுதேவன், அனந்தராமன் உடனிருந்தனர்.

Related Stories: