என்ஆர் காங்கிரசை வீழ்த்த மதசார்பற்ற கட்சிகள் வியூகம்

புதுச்சேரி,  நவ. 20:  தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரசை  வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக களமிறங்க  ரகசிய வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் அசோக் ஆனந்த். சொத்து  குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக சில வாரங்களுக்கு முன்பு  அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்,  இத்தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்  அனுப்பினார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி  அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 இதன் காரணமாக தட்டாஞ்சாவடி தொகுதி  இடைத்தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கனவே அங்கு 2016  பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேதுசெல்வத்துக்கு  2வது இடம் (5,296 வாக்குகள்)  கிடைத்தது. இதுதவிர கலியபெருமாள் (திமுக), காசிநாதன் (அதிமுக),  சிவானந்தம் (பாஜக), முருகசாமி (பாமக), கண்ணதாசன் (நாம் தமிழர்), பசுபதி  (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் களத்தில் இருந்தனர். மேலும் ஜெயபாலன் என்ற  ஒரு சுயேட்சையும் போட்டியிட்டார். மொத்தம் 29 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட  இத்தொகுதியில் தற்போது நடைபெற்று முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தப்  பணியின்போது மேலும் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 இதனால் ஜனவரி  முதல்வாரத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபின் தட்டாஞ்சாவடி  தொகுதியில் வாக்களிக்க தகுதி

யுடையவர்களாக எத்தனை நபர்கள் உள்ளனர் என்பது  தெரியவரும். தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ்  போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது  தொடர்பாக ரகசிய ஆலோசனையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஈடுபட்டுள்ளார்.  அதேபோல் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான திமுகவுக்கு  ஏற்கனவே கடந்த தேர்தலில் இத்தொகுதியை ஒதுக்கி

யிருந்ததால் மீண்டும்  அக்கட்சியை களமிறக்குவது தொடர்பான முடிவில் உள்ளது. இதுதொடர்பாக  இருகட்சிகளின் தலைமை பேசி முடிவெடுத்து வேட்பாளரை அறிவிக்கும் என தெரிகிறது.

 இதற்கிடையே கடந்த தேர்தலில் 2வது இடத்தை பிடித்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சேதுசெல்வம், மீண்டும் அங்கு  போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். தற்போது வீடுவீடாக நிலவேம்பு கசாயத்தை  வழங்கி தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். இத்தொகுதியில் மதச்சார்பற்ற  அணிகளின் ஓட்டுவங்கி சிதறும் பட்சத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியை என்ஆர்  காங்கிரசே மீண்டும் எளிதாக தக்க வைத்து விடும் என்ற ஐயம் மற்ற கட்சிகளிடம்  உள்ளது. ரங்கசாமி, அசோக் ஆனந்த் இருவருக்கும் இத்தொகுதியில் அதிகளவில்  செல்வாக்கு இருப்பதால், மற்ற கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டால் வெற்றி  பெறுவது மிகுந்த சிரமம் என கூறப்படுகிறது.

 நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற  தேர்தலுக்காக ஒரே அணியாக திரண்டு வருகின்றன. அதற்கு முன்னதாக தட்டாஞ்சாவடி  தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அங்கு முன்னோட்டமாக  மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வேட்பாளரை நிறுத்தி  வெற்றிபெற செய்ய ரகசிய வியூகம் வகுத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  தகவல் வெளியாகி வருகின்றன.

 எனவே தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான  நிலைப்பாட்டை மற்ற அரசியல் கட்சிகள் எடுக்குமா என்ற  பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Related Stories: