நிதி செயலர் கூறுவது மக்களாட்சிக்கு எதிரானது

புதுச்சேரி, நவ. 20:  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு அரசு துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பளம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கும் வகையில் அரசு மானிய தொகைகள் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கூறுகிறார். கவர்னர், என்னிடம் கோப்பு வரவில்லை என கூறுகிறார். இவர்களுக்கு இடையே நிதி செயலர் கந்தவேலு நன்றாக குட்டையை குழப்புகிறார்.

மக்களுக்காகத்தான் சட்டங்களும், விதிகளும் இருக்கின்றன. மக்கள் பரிதவித்து செத்து மடிவதற்காக சட்டவிதிகள் பெயரால் வியாக்கியானம் செய்யக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்று சொல்லும் கவர்னரும், நிதி செயலரும் பத்தாயிரம் ஊழியர்களின் குடும்பங்களை காப்பாற்றும் வகையில் உடனடியாக சம்பளம் மற்றும் சம்பள பாக்கியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி பகிர்ந்தளிப்பு விதி சம்பந்தமாக இதுவரை இருந்து வருகிற நடைமுறை தொடர வேண்டும் என முதல்வர் போட்ட ஆணையை அமல்படுத்த முடியாது என்று நிதி செயலர் கூறுவது சட்டவிரோதமாகும். புதுச்சேரி மக்களின் தேர்வு செய்யப்பட்ட மக்களாட்சிக்கு எதிரானதாகும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Related Stories: