108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 20:  புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. புதுச்சேரியில் 63 பேரும், காரைக்காலில் 35 பேரும், மாகேவில் 17 பேரும், ஏனாமில் 11 பேரும் என மொத்தம் 126 டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2005ம் ஆண்டு முதல் நேர்முகத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் இல்லாததால் நோயாளிகளை ஏற்றி, இறக்கும் வேலையையும் டிரைவர்களே செய்து

வருகின்றனர்.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்து சம்பளத்தை உயர்த்தவும், காலத்தோடு ஊதியம் வழங்கவும், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்களை நியமிக்கவும் கோரி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாசலம் போராட்டத்தை துவக்கி வைத்தார். சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் யோகானந்தன், பொருளாளர் லூர்து மரியநாதன் மற்றும் ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். வரும் 24ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவோம், 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீல வண்ண பட்டை அணிவோம், 6ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: