நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து இறப்பு விகிதம் குறைந்துள்ளது

விழுப்புரம், நவ. 20: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் சாலை விபத்தில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர், சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த விபத்துகளில் 28.4 சதவிகிதம், தேசிய நெடுஞ்சாலைகளிலேயே ஏற்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலேயே அதிக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளைக்கொண்டுள்ள மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது. தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய மாவட்டமாக உள்ளதால் அதிகளவு வாகனங்கள் விழுப்புரத்தை கடந்து செல்கின்றன. அதற்கேற்ப ஆண்டுதோறும் விபத்துக்கள் எண்ணிக்கையில் விழுப்புரம் மாவட்டம் தான் முன்னிலையில் இருக்கும் நிலை இருந்தது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது (என்.எச்.45), ஓங்கூர் கிராமத்தில் தொடங்கி ஆசனூர் வரை சுமார் 110 கிலோமீட்டர் தொலைவுக்கு விழுப்புரம் மாவட்டம் வழியாகவே செல்கிறது. இந்த சாலைகளில் மட்டும் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 5 சதவிகித விபத்து இந்த மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. முறையற்ற அணுகுசாலைகளால், வாகனங்களைக் கண்ட இடங்களில் நிறுத்துவதும், அந்த சாலைகள் ஒழுங்கற்ற முறையில் பிரதான சாலையை வந்தடைவது அல்லது பிரிவதால், போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்லும் இந்த விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயக்குமார் ஆரம்பத்திலிருந்தே தீவிரம் காட்டினார். பொறுப்பேற்ற அன்றே மாவட்டத்தில் நடக்கும் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன்படி அவர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் சொன்னதை  நிரூபித்து காட்டியிருக்கிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தடுக்க, அதிகளவு விபத்துக்கள் நடக்கும் முக்கிய இடங்களான அரசூர், எல்லீஸ்சத்திரம், கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கம், சலாவதி, சாரம், ஜக்காம்பேட்டை, ெசண்டூர், செங்குறிச்சி உள்ளிட்ட 17 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வாகனங்களின் வேகத்தை குறைக்க 97 இடங்களில் ராட்சத பேரிகார்டு அமைக்கப்பட்டது. இரவில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க 50 இடங்களில் மிளிரும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் தேவையற்ற இடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வதால் பெரும் விபத்துக்கள் நடக்கிறது. இதனை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மூலம் சாலையில் நகர்ந்துகொண்டே காவல்துறையினர் கண்காணித்து அவ்வாறு நின்றிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இப்படி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல்துறை, வட்டார போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் 3,863 விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். 2017ம் ஆண்டில் 3,656 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆண்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,940 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 494 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 716 சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் 330 குறைந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு விபத்தில் உயிரிழந்துள்ளதால், கடந்த ஆண்டு முதலே விழுப்புரம் மாவட்டத்தில் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், அடுத்தகட்டமாக வழக்கு பதிவு, அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும் 15,335 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால் தற்போது இருசக்கரவாகன விபத்துக்கள், உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்பியின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ள நிலையில் சமூகஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். காவல்துறை மட்டுமின்றி, வட்டார போக்குவரத்து துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்துதான் இந்த முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இருப்பினும் வருங்காலங்களில் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் சாலைவிதிகளை பின்பற்ற உறுதியேற்க வேண்டும் என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது இந்த ஆண்டில் நடந்துள்ள அதிகப்படியான விபத்துக்கு காரணமானவைகள் குறித்து அதற்கேற்ப புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: