சாலையோரமாக வாகனத்தில் வியாபாரம் செய்ய தடை

கள்ளக்குறிச்சி, நவ. 20:    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமாக தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட கடைகள்

உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் ஆங்காங்கே வாகனத்தில் சாலையோரமாக நிறுத்தி 50க்கும் மேற்பட்ட நபர்கள் குறைந்த விலையில் வியாபாரம் செய்து வருவதால் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளது. சாலையோர வாகன கடை வியாபாரிகள் விற்பனை செய்து வருவதை கண்டித்து இன்று(20ம் தேதி) தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று இருதரப்பு வியாபாரிகளை அழைத்து சமாதானம் கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அருண் தலைமை தாங்கினார்.

காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், நகரமைப்பு கட்டிட ஆய்வாளர் தாமரைச்செல்வன், இளநிலை உதவியாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் சாலையோரம் வாகனத்தில் காய்கறி, பழம் விற்பனை செய்யக்கூடாது என்றும் கச்சிராயபாளையம் சாலை பகுதி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள சாலை பகுதியிலும், சேலம் மெயின்ரோடு சாலை ஏமப்பேர் பகுதியிலும், தியாகதுருகம் சாலை ஏகேடி பள்ளி அருகிலும், சங்கராபுரம் சாலை கோட்டைமேடு பகுதியிலும் வாகனத்தில் வியாபாரம் செய்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.  

 

அதற்கு சாலையோர வாகன கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தும் அதனை ஏற்காமல் வாக்குவாதம் தொடர்ந்தது. இந்நிலையில் திடீரென தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திட்டமிட்டபடி இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சாலையோரமாக வாகனத்தில் காய்கறிகள், பழம் விற்பனை செய்ய தடை செய்வதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையும் மீறி சாலையோரமாக வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்தால் காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அருண் தெரிவித்தார். இதில் உதவி ஆய்வாளர் பாலமுரளி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், வருவாய் ஆய்வாளர் ராஜா, விஏஓ அக்பர் பாஷா மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், சாலையோர வாகன வியாபாரிகள் பலர் கலந்து

கொண்டனர்.

Related Stories: