சென்னை விமான நிலையத்தில் 4 லட்சம் கடத்தல் தங்கம் 8 லேப்டாப்கள் பறிமுதல்

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஏர்ஏசியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த இஸ்ரப் (32) என்ற வாலிபரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் பயன்படுத்திய 8 லேப்டாப்களை கொண்டு வந்தார். விமானத்தில் பயணம் செய்பவர்கள், பயன்படுத்தியதாக இருந்தாலும், ஒருவருக்கு ஒரு லேப்டாப் கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால், அவர் 8 லேப்டாப்களை கொண்டு வந்ததால், அதனை பறிமுதல் செய்தனர். ஆனாலும் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரது உடல் முழுவதும் சோதனை செய்தபோதும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர் அணிந்து இருந்த பிளாஸ்டிக் செருப்பு மோல்டிங் டிசைனில் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவரது செருப்பை கழற்றி சோதனை செய்தபோது, அதன் பின் பகுதியை கிழித்து அதில் ஒரு செருப்பில் ஒரு தங்க கட்டி என 2 கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 180 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 4.5 லட்சம். இதை தொடர்ந்து அதிகாரிகள், அந்த தங்கத்தையும் பறிமுதல் செய்து, இஸ்ரப்பை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: