கடலில் கலந்த எண்ணெய் கசிவு அகற்றும் பணி இரவு பகலாக தீவிரம்

சென்னை: மார்ஷல் தீவில் இருந்து காமராஜர் துறைமுகத்திற்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவால் கடலில் கலந்த 2 டன் எண்ணெய் அகற்றும் பணி இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு வளைகுடா நாடான மார்ஷல் தீவுக்கு சொந்தமான கோரல் ஸ்டார் என்ற கப்பல் 25 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம் அதிகாலை மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் இருக்கும் எண்ணெயை இணைப்பு குழாய் மூலம் துறைமுகத்துக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழாய் இணைப்பு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, துறைமுக கடல் பகுதியில் சுமார் 2 டன் கச்சா எண்ணெய் கலந்தது.

இதையடுத்து உடனடியாக அவற்றை அகற்றும் பணியில் கப்பலில் இருந்த ஊழியர்களுடன் சேர்ந்து துறைமுக ஊழியர்களும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால், நேற்று காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறக்கும் நிலையும், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் கூறுகையில், ‘கப்பலில் இருந்து சுமார் 2 டன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இவற்றை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவுக்குள் கடல் பகுதியில் பரவிய அனைத்து எண்ணெய் கசடுகளை முழுவதுமாக அகற்றிவிடுவோம்’ என்றனர். இதையடுத்து, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 80 சதவீத எண்ணெய் அகற்றப்பட்டுவிட்டதாக தெரியவந்தது. மேலும், அதன்பிறகு வெளிச்சம் இல்லாததால் விளக்குகள் அமைத்து ஊழியர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நாளை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

கப்பல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

கடலில் எண்ணெய் கசிவு காரணமாக, கடலோரக் காவல்படை சம்பந்தப்பட்ட கோரல் ஸ்டார்ஸ் கப்பல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் எண்ணெய் கசிவை முழுமையாக அகற்றிய பின்புதான் கப்பல் செல்ல வேண்டும் என்றும், எண்ணெயை அகற்றும்போது கடலில் சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பான அறிக்கையை காமராஜர் துறைமுகம் மற்றும் கடலோரக் காவல்படைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: