ஐகோர்ட் உத்தரவு எதிரொலி பிரபல பிரியாணி கடைக்கு சீல்

மாதவரம், நவ.20: மாதவரம் மூலக்கடை சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் சிலர் ஆக்கிமித்து, கட்டிடம் கட்டி கடைகள் வாடகைக்கு விட்டுள்ளனர். இதில், பிரபல பிரியாணி கடை செயல்படுகிறது. இந்த இடத்துக்கான எவ்வித ஆவணம் இல்லாமல், கட்டிடம் கட்டி கடைகள் நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 6-4-2017 அன்று கடை அமைந்துள்ள நிலம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளே விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உத்தரவிட்டது.

இதையடுத்து மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், கட்டிடம் அமைந்து இடத்துக்கான ஆவணங்கள் முறையாக இல்லை என தெரியவந்தது. இதனால், அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

 அதன்பேரில் திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் விஜயகுமார், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் மூலக்கடை சந்திப்புக்கு சென்றனர். மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் செயபடும் பிரியாணி கடையை பூட்டி, சீல் வைத்தனர். மேலும், அந்த கட்டிடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற  அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர்.

Related Stories: