போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மூதாட்டிக்கு இதயத்தில் வால்வு பொருத்தி சாதனை : டாக்டர்கள் பேட்டி

சென்னை, நவ.20:  போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 79 வயது மூதாட்டிக்கு இதயத்தில் வால்வு பொருத்தி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.  

சென்னையை சேர்ந்தவர் வசந்தகுமாரி (79). இவருக்கு  இதயத்தில் அடைப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இவரை பரிசோதித்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள், வசந்தகுமாரியின் இதயத்தில் உள்ள வால்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயிலும் அடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாரி  79 வயதை கடந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்வது  சில நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  மரணமும் ஏற்படும் என்பதால் அறுவை சிகிச்சை முறை கைவிடப்பட்டது. அவருக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன்  சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தொடையில் இருக்கும் ரத்த குழாயில்  நுண்துளை  கருவியை செலுத்தி இதயத்தில் உள்ள ரத்த குழாயின் அடைப்பை நீக்கியதுடன் புதிய ஒரு வால்வையும் பொருத்தி மருத்துவர் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து, இதய சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர் எஸ்.கேந்திர பூபதி, டி.ஆர்.முரளிதரன், ரஞ்சித், வினோத் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

மருத்துவமனைக்கு வந்த மூதாட்டிக்கு  இதயம் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளது. இவருக்கு  இதயத்துக்கு செல்லும் வலப்புற ரத்த குழாயில் ஸ்டென்ட்டு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பலமுறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இதயத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு வந்த மூதாட்டியின் இதயத்தில் இடது புறத்தில் செல்லக்கூடிய வால்வு பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் ரத்த குழாயிலும் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மிகவும்  வயதான இவருக்கு அறுவை சிகிச்சை அளிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவ குழுவினர் ஆலோசித்து மூதாட்டிக்கு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நுண்துளை கருவியை தொடையின் மூலம் செலுத்தி இதயத்தில் உள்ள ரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, புதிய வால்வும் பொருத்தப்பட்டுள்ளது. இனி மூதாட்டிக்கு இதயம் சம்பந்தமான எந்த நோயும் வர வாய்ப்பில்லை. மேலும் இதயத்தில் உள்ள ரத்த குழாயில் வால்வு பொருத்துதல் மற்றும் அடைப்பை நீக்குதல் போன்ற இரு சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் நடந்தது தென்னிந்தியாவிலேயே இது முதல்முறையாகும். இது எங்கள் மருத்துவமனையின் சாதனையாகும். இவ்வாறு கூறினர்.

Related Stories: