வஉசி சிலைக்கு மாலையணிவிக்க போலீஸ் தடை பாளையில் தமமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

நெல்லை, நவ.19:  நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள வஉசி சிலைக்கு மாலையணிவிக்க தமமுகவிற்கு போலீசார் நேற்று தடை விதித்தனர். இதையடுத்து கட்சியினர் பாளை வஉசி மைதானத்தில் திரண்டு போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வஉசியின் 82வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டதையொட்டி டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாநகர மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் நேற்று பாளை மகாராஜநகரிலிருந்து வஉசி சிலைக்கு மாலையணிவிக்க புறப்பட்டு வந்தனர். பெருமாள்புரம் போலீசார் அவர்களை வழிமறித்து டவுன் மணிமண்டபத்திற்கு அனைவரும் சென்றால் பிரச்னைகள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்கள் செல்ல தடை விதித்தனர்.

இதையடுத்து கட்சியினர் பாளை வஉசி மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு கண்மணி மாவீரன் தலைமையில் மாலையணிவித்தனர். நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் துரைப்பாண்டியன், நிர்வாகிகள் முத்துப்பாண்டியன், ஜெகன், ஏபேஸ் பாண்டியன், ஆதித்தனார், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் சிலைக்கு வெளியே சென்று போலீஸ் அனுமதி மறுப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜாதி பூசலை போலீசாரே தூண்டுவதாக ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: