நதிகளுக்கு மணல் கொள்ளை பெரும் சவாலாக உள்ளது

நெல்லை, நவ. 19: நெல்லையில் கடந்த அக்டோபர் மாதம் தாமிரபரணி மகாபுஷ்கர விழா 12 நாட்கள் நடந்தது. இந்த நாட்களில் பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை பல்வேறு தீர்த்தக் கட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து புனித நீராடினர். இந்த விழாவுக்காக பல்வேறு குழுக்கள் ஆங்காங்கே பக்தர்கள் நீராடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இவ்வாறு ஏற்பாடுகளை செய்த குழுவினருக்கு பாராட்டு விழா ெநல்லை மகராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், குழுவினர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தாமிரபரணி புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நதிகள் பாதுகாப்பு என்பது ஒரு சவாலான விசயமாக உள்ளது. ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலந்து மாசுபடுதல் போன்றவை நதிகளுக்கு சவால்கள் உள்ளன. இவற்றை விட மிகப்பெரிய சவாலாக மணல் கொள்ளை உள்ளது.

நெல்லை தாமிரபரணியில் மணல் கொள்ளையை தடுப்பதற்காக அரசியல் தலைவர் நல்லக்கண்ணு வழக்கு ெதாடர்ந்த போது நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து ஆகியோர் தாமிரபரணியில் எந்த இடத்திலும் மணல் அள்ளக்கூடாது என தடை விதித்தனர். தாமிரபரணி மட்டுமின்றி காவிரி போன்ற பல்வேறு நீர்நிலைகளிலும் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும். தாமிரபரணிக்காக நடத்தப்படும் இந்த விழாவில் பெருமளவில் மக்கள் பங்கேற்றிருப்பது பாராட்டுக்குரியது. தாமிரபரணி தூய்மைக்கு, அண்ணா பல்கலைக் கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறார். அவரும் பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் தலைமை வகித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கர், காவல்துறை முன்னாள் ஐஜி மாசானமுத்து, சமூக ஆர்வலர் கோபாலரத்தினம் ஆகியோர் பேசினர். ஜெயேந்திர பள்ளி தாளாளர் ஜெயந்திரன்மணி நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நம் தாமிரபரணி அமைப்பு பொறுப்பாளர்கள் வித்யாசாகர், நல்லபெருமாள், முத்துகிருஷ்ணன், கல்யாணராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: