காவல்நிலையம் எதிரே துணிகரம் கடையை உடைத்து திருட முயற்சி கொள்ளையன் சிக்கினான்

நெல்லை, நவ.19:  விகேபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜவகர் (54). இவர், விகேபுரம் காவல்நிலையம் எதிரே இரும்பு, பெயின்ட் விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்த போது கடையின் காம்பவுன்ட் சுவர் கிரில் கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையின் முன்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் பணம், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து ஜவகர், விகேபுரம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கடையின் உள்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது. கடையின் மெயின் கதவை உடைத்து உள்ளே புகும் கொள்ளையன் அங்கிருந்த கேஸ்பாக்சை உடைக்க முயன்றுள்ளான். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த பெயின்ட் உள்ளிட்ட பொருட்களை தூக்க முயன்றுள்ளான். அதுவும் முடியாததால் கொள்ளையன் வந்த வழியே திரும்பிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடத்தியதில் கடையில் திருட முயன்றது விகேபுரம் ஜார்ஜ்புரம் தெருவைச் சேர்ந்த டேவிட் (52) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: