இயற்கை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மண்குளியல் பயிற்சி

நெல்லை, நவ.19:  நேச்சரோபதி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மண்குளியல் சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது. கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நேச்சரோபதி (இயற்கை தின) விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். மின்வாரிய இளநிலைப்ெபாறியாளர் ஊசிகாட்டான் முன்னிலை வைகித்தார். யோகா தெரபி சிகிச்சை நிபுணர் மனோகரன் மண்குளியல் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து அதன் பயன்கள் குறித்து பேசினார். தூர்தர்சன் துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் ஆகியோர் பேசினர். உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் நன்றிகூறினார். ஏற்பாடுகளை மேலப்பாளையம் மனோ யோகா தெரபி மையம் இணைந்து செய்திருந்தது. பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முதல் இயற்கை உணவு தினவிழா கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தி இயற்கை உணவு கொள்கையை 1945ம் ஆண்டு நவ.18ம்தேதி உணவே மருந்து என்பதை கடைபிடிக்க அறிவுறுத்தினார். நோய்கள் தீரவும், வராமல் இருக்கவும் உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் முறை இயற்கை உணவு தினம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று டாக்டர்கள் சங்கர்கணேஷ், உமாஅற்புதசெல்வி ஆகியோர் தலைமையில் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த உள் மற்றும் புறநோயாளிகளுக்கு இயற்கை உணவு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு எந்தெந்த உணவை எந்த நோய் தீர்க்க எந்தளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. பித்தத்தை குறைக்கிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்களை குறைக்கிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. வேர்க்கடலையில் வைட்டமின் பி சத்துள்ளது. இது பித்தப்பை கற்கள் உருவாகுவதை தடுக்கிறது. முளைக்கட்டிய பச்சைபயிறு உடலில் ஏற்படும் தளர்ச்சியை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. பப்பாளி பழத்தில் வைட்டமின் இ மற்றும் சி உள்ளது. இது கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. மாலைக்கண் நோய்க்கு சிறந்த தீர்வாக உள்ளது. தேங்காயில் நார்சத்து அதிகம் உள்ளது. தாய்ப்பாலுக்கு இணையான பண்பு தேங்காய்ப்பாலில் உள்ளது என்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Related Stories: