தாழையூத்தில் வாறுகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

தாழையூத்து, நவ.19:  தாழையூத்தில் வாறுகால் வசதி இல்லாததால் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தாழையூத்திலிருந்து ராஜவல்லிபுரம் செல்லும் சாலையில் உள்ளது செல்வம்நகர். நாரணமாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் சுமார் 500 வீடுகள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதியில்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. கடும் துர்நாற்றத்தினை உண்டாக்குவதுடன் கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பலர் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியினை சேர்ந்தவர்கள் கூறுகையில், இப்பகுதியில் 1500க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கழிவுநீர் வெளியேறுவதற்கென்று வாறுகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து உற்பத்தியாகும் கொசுகளால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிப்படைந்து வருகிறோம். வாறுகால் அமைக்க கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையுமில்லை.

வீட்டுவரி மற்றும் உபரி வரிகள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட போதும் அடிப்படை தேவைகள் ஏதும் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்படவில்லை. கலெக்டரிடம் மனு, போராட்டம் என தொடர்ந்து போராடிய போதும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆக்கிரமிப்புகளால் தான் இதுவரையில் வாறுகால் திட்டம் செயல்படவில்லை என்றும் கூறினர். குளம் போல தேங்கி நிற்கும் கழிவுநீர், மழை நேரங்களில் வீட்டைவிட்டு மக்கள்  வெளியில் வரமுடியாதபடி சூழ்ந்துவிடும். எனவே பலத்த மழைக்கு முன்பாக   கழிவுநீர வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சலால் உயிர்பலி மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பாராமுகம், அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இந்நிலை நீடிக்கிறது.எனவே கலெக்டரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்கள் பாதிப்படைந்த பின்னர் காரணங்களை ஆராய்வதும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களுக்கு அபராதம் விதித்திடும் முன்பாக, நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட மக்களின் நலன் கருதி உடனடியாக வாறுகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Stories: