பொருநை மக்கள் இயக்க விழா நதிகளை தொலைப்பது வருங்கால சந்ததிக்கு நல்லதல்ல நெல்லையில் நடிகை ரோகிணி பேச்சு

நெல்லை, நவ.19: நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் பொருநை மக்கள் இயக்க துவக்க விழா நடந்தது. பேராசிரியர் பொன்னுராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் கிருஷ்ணன், ராமானுஜம், அமலநாதன்  முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் நாறும்பூநாதன் வரவேற்றார். பேராசிரியர் அருணன் வாழ்த்தி பேசினார். விழாவில் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகள் பேசியதாவது: மதம் என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. மதம் நிதானமானதாக, அன்பை பகிர்வதாக இருக்க வேண்டும். இப்போது மதம் மனிதனை மிருகமாக்கிவிடும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.பண்பாடு பயனற்று போனதால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரைச் சேமிக்க வழியில்லாத தமிழகத்தின் நிலை வேதனையளிக்கிறது. முல்லைப்பெரியாறு, காவிரி நதிகளைப் போன்று பிரச்னைகள் எதுவும் இல்லாத நதியாகவும், வற்றாத ஜீவநதியாகவும் பாய்ந்தோடும் தாமிரபரணி மீதான அக்கறை மிகவும் குறைவு. தாமிரபரணியை மட்டுமன்றி இயற்கையைக் காக்க இளம் தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்றார்.

நடிகை ரோகிணி பேசுகையில்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் மிகவும் ஆபத்தானவை. அதற்கு எதிராக போராடி வெற்றி கண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணியை குழந்தையைப் போல பராமரிக்க வேண்டும்.

நதிகள், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற புரிதல்கள் இளைஞர்களுக்கு தேவை. நதிகளைத் தொலைப்பது வருங்கால தலைமுறைக்கு நல்லதல்ல என்ற விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். இயற்கை மீதும் பெண்கள் அக்கறை கொள்ள வேண்டும். குளங்கள், ஏரிகள் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நன்றாக பராமரிக்கப்பட்டன. அதுவே அரசுகளின் கைகளுக்குச் சென்ற பின்பு பராமரிப்புக்குறைந்துவிட்டது. இப்போது மீண்டும் மக்கள் கைப்பற்றி பராமரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இயற்கையை மீட்டெடுக்கும் ஆர்வம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அறிஞர்கள், ஆலோசகர்கள் முயற்சியால் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். தாமிரபரணி குறித்த ஆவணப்படத்தை எனது தோழி தீபா ஜானகிராமன் தயாரித்து வருகிறார் என்றார்.முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கண்ணன், பேராசிரியர் நசீர், பாலச்சந்திரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். பேராசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Related Stories: