சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கார்த்திகை பெருவிழா தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்

சோளிங்கர், நவ.19: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நேற்று தொடங்கிய கார்த்திகை பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரிய, சிறிய மலைகளில் உள்ள கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் வந்து மலையடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை பெருவிழாவையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையொட்டி சோளிங்கர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோயில், மலையடிவார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related Stories: