புளூவேல் விளையாட்டை தொடர்ந்து மற்றொரு இம்சை ‘அதிக மது குடிக்காவிட்டால் கொல்வேன்’ இளைஞரை மிரட்டிய மோமோ

வேலூர், நவ.19: ‘அதிக மது குடிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன்’ என்று மோமோ மூலம் மிரட்டுவதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கொடுத்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‘புளூவேல்’ விளையாட்டை தொடர்ந்து ‘மோமோ சேலஞ்ச்’ என்ற விளையாட்டு தற்போது ஸ்மார்ட் செல்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டு வாட்ஸ் அப் மூலம் அறிமுகம் இல்லாத எண்ணாக வரும். இதையடுத்து மெசேஜ் வரும். அதில், ‘சம்பந்தப்பட்ட செல்போனில் உள்ள தகவல்கள், ரகசியங்களை சேகரித்துள்ளோம். நாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் இதை வெளியிட்டு விடுவோம் என்ற மிரட்டலுடன் கொலை செய்வதாகவும் மிரட்டல் வருமாம். எனவே ஆபத்தான இத்தகைய விளையாட்டை தவிர்க்க மாணவர்கள், சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வேலூர் கஸ்பாவை சேர்ந்த காதர்(24) என்பவர் மோமோ விளையாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 4 மாதங்களுக்கு முன் எனது வாட்ஸ்அப் செயலிக்கு முன்பின் தெரியாத எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் ‘உன் செல்போனில் உள்ள தகவல்கள் எல்லாம் திருடப்பட்டு விட்டது. நான் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால் அதை வெளியிட்டுவிடுவேன் என்று அனுப்பப்பட்டிருந்தது. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. அந்த மெசேஜை அழித்து விட்டேன்.

மீண்டும் என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு, வேறு 2 எண்களில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் உன்னை விடமாட்டேன், கொல்லப்போகிறேன் என்று வந்தது. தொடர்ந்து நான் சொல்லும் கட்டளையை பின்பற்ற வேண்டும். உடனடியாக அதிகளவில் மது குடிக்க வேண்டும் என்று கடந்த 16ம் தேதி இரவு கட்டளை வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியில் உள்ளேன். இந்த மோமோ சேலஞ்ச் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், காதருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் காதரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பியவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வாட்ஸ் அப்பில் முன்பின் தெரியாத எண்ணில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: