×

சேத்துப்பட்டு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பலி : குளிக்கச்சென்றபோது சோகம்

சேத்துப்பட்டு, நவ.19: சேத்துப்பட்டு அடுத்த மோகனபாளையம் கிராமத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மோகனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு சுபாஷினி(10) உட்பட 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சுபாஷினி அதே ஊரில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். அதேபோல் அதே கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், கட்டிடத் தொழிலாளி.

இவரது மனைவி உமா இவர்களுக்கு பூமிகா(14) என்ற மகளும், பாலாஜி(11) என்ற மகனும் உள்ளனர். பூமிகா அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பெய்த மழையால் அங்குள்ள ஏரியின் மைய பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. நேற்று மதியம் பூமிகா தனது தம்பி பாலாஜி, தோழி சுபாஷினி ஆகியோருடன் விறகு பொறுக்குவதற்காக சென்றார். பின்னர் அவர்கள் அங்குள்ள ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்க இறங்கினர். அப்போது பூமிகாவும், சுபாஷினியும் எதிர்பாராதவிதமாக சகதிக்குள் சிக்கி மூச்சுத்திணறினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலாஜி அவசர, அவசரமாக கரையில் ஏறி ஊருக்குள் சென்று தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கிராம மக்கள் திரண்டு ஏரிக்கு விரைந்து சென்றனர். அதற்குள் சுபாஷினியும், பூமிகாவும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். உடனடியாக கிராம மக்கள் ஏரியில் இறங்கி இரண்டு பேரின் சடலங்களையும் மீட்டனர். தங்கள் மகள்களின் சடலங்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து நீரில் மூழ்கி இழந்த மாணவிகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு தாசில்தார் தமிழ்மணி, வருவாய் ஆய்வாளர் ஜீவா ஆகியோரும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்தது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags : children ,lake ,cemetery ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...