×

திருவண்ணாமலை தீபத்திருவிழா 5ம் நாள் கோலாகலம் : வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலையில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தீபத்திருவிழா உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. மகாதீப தரிசனத்துக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், திருவண்ணாமலை நகரம் விழாகோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது.

அப்போது, வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளி, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பகல் 2 மணியளவில் காலை உற்சவம் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் இரவு உற்சவம் விமரிசையாக தொடங்கியது. திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை முடிந்ததும், மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து ராஜகோபுரம் எதிரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா, அரோகரா’ என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

வண்ண மின் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின்போது, அண்ணாமலையார் பவனி வரும் வாகனங்களில் மிக பிரமாண்டமானது வெள்ளி பெரிய ரிஷப வாகனம். ‘கண்ணாரமுதனை காண கண்கோடி வேண்டும்’ என அடியார்கள் அடிதொழும் அண்ணாமலையாரின் வீதியுலாவை தரிசிக்க கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Thiruvannamalai Deepathirigai ,Annamalaiyar street ,Kolakalam ,
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை