×

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் சார்பதிவாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: லஞ்சம் வாங்கிய வேளச்சேரி பெண் சார்பதிவாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வரலட்சுமி. கடந்த 2014ம் ஆண்டு வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது, நிலத்தின் மதிப்பை விட குறைவான தொகைக்கு முத்திரைத்தாள் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி உரிய முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தால்தான் பத்திரம் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட ஆவணங்களை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க சார்பதிவாளர் வரலட்சுமி, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, அதை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வரலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர், போலீசார் அலுவலகத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, கழிப்பறை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம் ரூ.9 ஆயிரத்து 800 கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கு, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பூர்ணிமாதேவி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சார்பதிவாளர் வரலட்சுமி லஞ்சம் வாங்கியது உறுதியாகியுள்ளது. எனவே, 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதமும், கேமரா ஆபரேட்டர் சண்முகசுந்தரத்துக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை பாலகிருஷ்ணனிடம் திரும்ப வழங்கவும், கணக்கில் வராத பணத்தை அரசுடமையாக்கவும் கூறினார்.

Tags : jail ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை