×

2 ஐம்பொன் சிலை, 3 கோபுர கலசம் கொள்ளை ஆரணி அருகே துணிகரம் சோமநாத ஈஸ்வரர் கோயிலில் ₹5 லட்சம் மதிப்புள்ள

ஆரணி, நவ.16: ஆரணி அருகே சோமநாத ஈஸ்வரர் கோயிலில், ₹5 லட்சம் மதிப்புள்ள 2 ஐம்பொன் சிலைகள் மற்றும் 3 கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த உலகநாதன்(50) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல் பூசாரி உலகநாதன் கோயிலுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது சிவன் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு சென்று பார்த்தபோது சன்னதியில் இருந்த 2 ஐம்பொன் சிலைகள், கோயிலில் உள்ள விநாயகர், அம்மன், நவக்கிரக சன்னதிகளில் இருந்த 3 கோபுர கலசங்கள், அம்மன் கழுத்தில் அணிவித்து இருந்த 2 சவரன் மாங்கல்யம், சுவாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளி பட்டை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து, உலகநாதன் ஆரணி தாலுகா போலீஸ், கோயில் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, கோயில் ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர் டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையிலான நிபுணர்கள் அங்கு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடந்தது.

மேலும், இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன ஐம்பொன் சிலை மற்றும் கலசங்களின் மதிப்பு சுமார் ₹5 லட்சம் ஆகும்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுவரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், தற்ேபாது ஐம்பொன் சிலைகள், கோபுர கலசங்கள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : temple ,tower turquoise ,Aryan ,Somanatha Iswara ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...