×

மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் ₹16 லட்சம் செலவில் கொள்முதல் திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.16: கார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றுவதற்காக ₹16 லட்சம் மதிப்பில் 3,500 கிலோ முதல் தர நெய், வேலூர் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, மகாதீபம் ஏற்றும் தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 5 அடி உயரம் கொண்ட, தூய செம்பு உலோகத்தால் உருவான தீப கொப்பரை, வரும் 22ம் தேதி மலை மீது கொண்டுசெல்லப்படும். வரும் 23ம் தேதி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சிதரும். மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், வேலூர் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது.

ஆவின் நிறுவனத்திடம் இருந்து முதல் தரமான நெய் ஒரு கிலோ ₹458 என்ற விலையில் மொத்தம் ₹16 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து மகா தீபத்திற்கான நெய், நாளை கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெய் காணிக்கையை பணமாக செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ நெய் ₹80 என காணிக்கையாக கோயில் நிர்வாகம் பெறுகிறது. கோயில் 3ம் பிரகாரத்தில் தரிசன டிக்கெட் விற்பனை நிலையத்தில் எதிரில் உள்ள சிறப்பு பிரிவில் நேரடியாக நெய்குட காணிக்கை செலுத்தலாம். ரொக்கமாக செலுத்த விரும்புவோர், நிர்வாக அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் ராஜகோபுரம் திட்டி வாசல் அருகே, நெய் குடம் காணிக்கை செலுத்த கூடுதல் சிறப்பு பிரிவு தொடங்கப்படும்.

மகா தீபம் ஏற்றுவதற்கான ெநய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, மார்கழி மாதம் திருவாதிரையன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்துக்கு பிறகு, தீபச்சுடர் (தீப மை) பிரசாதம் வழங்கப்படும்.

Tags : festival ,Thiruvannamalai Thirupattu ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...