×

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56 நகல் எரிப்பு போராட்டம்

திருச்சி, நவ.16: திருச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56 நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதனை தடுத்த போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு காரணமாக
பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசாணை 56ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன் நேற்று மாலை நடந்தது. ‘ஒப்பந்த தொழிலாகும் அரசுத்துறை. பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கருவூல கணக்குத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் டிஜிட்டல் மயம் என்ற பெயரில் அரசுப்பணியிடங்கள் ஒழிப்பு, இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும்’ என பல்வேறு அபாயங்கள் கொண்ட அரசாணை 56ஐ மாவட்ட தலைநகரங்களில் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கென்னடி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், வணிகவரி ஆணைய சங்க மாநில தலைவர் லட்சுமணன், பொது சுகாதாரத்துறை மாநில துணைத் தலைவர் மோகன், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாணை 56ஐ கிழித்து, எரிக்க முயன்றனர். அப்போது கன்டோன்மென்ட் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அரசாணை 56 நகல்களை கைப்பற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி
கலைந்து சென்றனர்.

Tags : Tamil Nadu State Employees Union ,
× RELATED தெலுங்கானா அரசை கண்டித்து இன்று...