×

துறையூர் பகுதியில் மழை இல்லாததால் கருகிய வெங்காய பயிர்கள்

துறையூர், நவ.16: துறையூர் சுற்றுப்புற கிராமங்களில் மழை இல்லாததால் வெங்காய பயிர்கள் காய்ந்துபோனது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள கீழக்குன்னுப்பட்டி, புளியம்பட்டி, முத்தியம்பாளையம், சொரத்தூர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் புரட்டாசி பட்டத்தில் 500க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். புரட்டாசியில் பெய்த லேசான மழையை நம்பி வெங்காய சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் மேற்கொண்டு மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் வெங்காய பயிர்கள் கருகி விட்டன. இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த நான்கு வருட காலமாக மழை பொய்த்துப்போனதால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டது. காய்ந்த வெங்காய பயிர்களை அறுவடை செய்ய இயலாததால் ஆடு, மாடுகளுக்கு உணவாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த தண்ணீரை கொண்டு சொட்டுநீர் பாசன வசதி செய்தும், வெங்காய பயிர்களுக்கு உரமிட்டு பலவழியில் செலவு செய்தும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கருகிய வெங்காய பயிர்களுக்கு தமிழகஅரசு  உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். வெங்காயம் விளைச்சல் நன்றாக உள்ள காலங்களில் இடைத்தரகர்கள் வெங்காயத்திற்கு உரிய விலை தருவதில்லை. அதனால் அரசே நேரடியாக தங்களிடம் கொள்முதல் செய்து உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி