திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.16: திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் விற்பனை தொகையை கடைகளிலேயே பெற்றுச்செல்ல வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் டாஸ்மாக் பணியாளர்களை தாக்கி, ரூ.1.77 லட்சத்தை சமீபத்தில் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சோமரசம்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், டாஸ்மாக் மேலாளர் பணத்தை கட்டும்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், இச்சம்பவத்தை கண்டித்தும், டாஸ்மாக் சில்லறை விற்பனை தொகையை சென்னையில் உள்ளதுபோல் மாநிலம் முழுவதும் அந்தந்த கடைகளிலேயே அன்றாடம் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில தலைவர் பால்பாண்டி வாழ்த்தி பேசினார். மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொதுநூலகத்துறை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: