கொத்தடிமைகளாக வாத்து மேய்த்தவர்கள் மீட்பு பள்ளியில் சேர்த்த சப்-கலெக்டர் பெற்ற 2 மகன்களை ₹2 ஆயிரத்திற்கு விற்ற தந்தை

திருப்பத்தூர், நவ. 16: கிருஷ்ணகிரி அருகே பெற்ற மகன்களை ₹2ஆயிரத்துக்கு வாத்து மேய்ப்பவரிடம் விற்றார். கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் பள்ளியில் படிக்க திருப்பத்தூர் சப்-கலெக்டர் ஏற்பாடு செய்தார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரவணன் தனது முதல் மகன் அருண்குமார்(8), 2வது மகன் செல்வா(7) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிநாயணஅள்ளி தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரிடம் ₹2ஆயிரத்திற்கு தனது 2 மகன்களையும் விற்றுள்ளார். அவர்களை பாபு தஞ்சாவூர், ஆந்திரா, கடப்பா, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். மேலும் இவர்களை கண்காணிக்க குண்டர்களையும் பாதுகாப்புக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணன் உடல் நலக்குறைவால் இறந்தார். அவர் இறக்கும் முன் மனைவி வள்ளியிடம் தனது 2 குழந்தைகளை கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பாபு என்பவரிடம் விற்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வள்ளி தனது மகன்களை மீட்க கிருஷ்ணகிரி சென்றார். பல இடங்களில் தேடி மகன்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தார். பாபுவிடம் மகன்களை ஒப்படைக்குமாறு கேட்ட போது, பாபு அவர்களை விடுவிக்க மறுத்து வள்ளியை மிரட்டி அனுப்பினாராம்.  இதையடுத்து வள்ளி தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பாபு மற்றும் அவரது தம்பி மீது வழக்குப்பதிந்து, 2 சிறுவர்களையும் மீட்டு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

அப்போது, மகன்களை படிக்க வைக்க தன்னிடம் பணம் இல்லை என வள்ளி கூறினார். உடனடியாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசிய சப்-கலெக்டர், திருப்பத்தூர் அரசு பூங்கா மேல் நிலைப்பள்ளியில் இருவருக்கும் தனியாக ஆசிரியர்களை நியமித்து சிறப்பு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, நேற்று அருண்குமார் 3ம் வகுப்பிலும், செல்வா 2ம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு விடுதி ஒதுக்கி, பள்ளி சீருடை, புத்தகங்கள் வழங்கப்பட்டது. சீருடையில் பள்ளிக்கு சென்ற மகன்களை ஆனந்தத்தில் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: