பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு புயலுக்கு பின் பாதிப்புகள் இருந்தால் இயற்கை இடர்பாடுகளை நீக்க தயார் நிலையில் இருக்கிறோம் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் பேட்டி

கும்பகோணம், நவ. 16: கஜா புயலுக்கு பின் பாதிப்புகள் இருந்தால் இயற்கை இடர்பாடுகளை நீக்க தயார் நிலையில் இருக்கிறோம் என்று ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் மந்திராசலம் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று கஜா புயல் முன்னேற்பாடு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கஜா புயலை எதிர்கொள்ளவும், புயலுக்கு பின் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின் அதனால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக கணக்கீடு செய்யவும், மின்சாரம், மருத்துவம் உடனுக்குடன் வழங்கவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும், 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புயல் வந்தாலும், அதன்பிறகு சேதங்கள் ஏற்பட்டாலும் இந்த குழுவினர் முழு வீச்சில் செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

589 ஊராட்சிகளுக்கு தலா ஒரு ஜெனரேட்டர்களும், ஊராட்சிகளில் தலா 2 வீதம் 1,178 பொக்லைன் இயந்திரங்கள், 1178 இயந்திரய மர அறுவை இயந்திரங்களும், மரம் வெட்டுபவர்களும் தயார் நிலையில் உள்ளனர். மின்வெட்டு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தொட்டிகள் இயக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,361 குளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 27 இடங்களில் 36,000 மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. புயலுக்கு பின் மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார். உதவி செயற்பொறியாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு, பூங்குழலி உடனிருந்தனர். காவல் நிலைய வளாகத்தில் பட்டுப்போன மரங்கள் அகற்றம் கஜா புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக சாலையோரம், கட்டிடங்கள் அருகிலுள்ள அனைத்து பட்டுப்போன மரங்கள், தாழ்வாக தொங்கும் மரக்கிளைகள் அகற்றப்பட்டது. இதேபோல் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டுப்போன 30 ஆண்டுகள் பழமையான பூவரசு, புங்கன் மரங்களை அகற்றும் பணி நடந்தது.

Related Stories: