கஜா புயல் எச்சரிக்கையால் சேதுபாவாசத்திரம் பகுதியில் முகாமிட்டிருந்த அதிகாரிகள்

சேதுபாவாசத்திரம், நவ. 16: கஜா புயல் எச்சரிக்கையால் சேதுபாவாசத்திரம் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். நாகை- பாம்பன் இடையே கஜா புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதியில் முகாமிட்டு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பிரதீப்யாதவ், கலெக்டர் அண்ணாத்துரை, டிஆர்ஓ சக்திவேல், எஸ்பி செந்தில்குமார், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, ஆர்டிஓ மகாலட்சுமி, பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்தனர். கடலோர பகுதியில் நேற்று காலை முதல் ஒலிபெருக்கி மூலம் மாலை 4 மணிக்குள் புயல் பாதுகாப்பு இல்லம் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. புதுப்பட்டினம், கொள்ளுக்காடு, அதிராம்பட்டினம்,  சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், மனோரா, காரங்குடா, கழுமங்குடா, திருவத்தேவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தினார்.

அதிராம்பட்டினம் : தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு புயல் சின்னம் கட்டிடம், மீட்புக்குழு டெமோவையும் கஜா புயல் சிறப்பு அதிகாரியான பிரதிப்யாதவ் பார்வையிட்டார். பின்னர் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் போன்ற இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடம் மற்றும் மருத்து குழுவினர், 37 மீன்பிடி கிராம பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அதிராம்பட்டினத்தில் கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மீட்புக்குழுவினர் மற்றும் சென்னையிலிருந்து வெள்ளத்தால் சிக்குவோரை காப்பாற்ற அதிநவீன ஏர் படகுகள் இரண்டு தயார் நிலையில் உள்ளன. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினரும் மற்றும் சுகாதார பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். பேரூராட்சி மூலம் உணவுகள் தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து வந்து பாதுகாப்பான முறையில் நிறுத்தியுள்ளனர். அதிராம்பட்டினம் கடல் மிகவும் அமைதியாக இருப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். புயல் சின்னம் தொடர்பான அவசர உதவிக்கு 24 மணி நேரமும் 04373 242450 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Related Stories: