×

கொளத்தூர் ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்துக்கு வாங்கிய கதவு, ஜன்னல்கள் வீணாகும் அவலம்

மேட்டூர், நவ.16: கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துக்கு வாங்கிய கதவு, ஜன்னல்களை பயனாளிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போட்டு வீணடித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி, சித்திரப்பட்டிபுதூர், தின்னப்பட்டி, கண்ணாமூச்சி உட்பட  14 ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கேட்டு 420 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் பசுமை வீடுகள் திட்டத்தில் 31 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இத்திட்டத்திற்காக வாங்கப்பட்ட இரும்பு கதவு, ஜன்னல்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளோம். 4 தவணையாக மானியத்தை வழங்கிய அதிகாரிகள் கதவு, ஜன்னல்களை உரிய காலத்தில் வழங்கவில்லை. கட்டடப்பணிகள் முடிந்ததை அடுத்து, வேறு வழியின்றி காசு கொடுத்து நாங்களே கதவு, ஜன்னல்களை வாங்கி பொருத்தி விட்டோம். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டு, அதற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல் உள்ளோம். சிலர் வீடுகட்ட வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் விற்றுவிட்டனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பசுமை வீடுகள் திட்டத்துக்கு வந்த கதவு, ஜன்னல்கள் ஓராண்டுக்கும் மேலாக திறந்த வெளியில் ேபாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவை மழை வெயிலில் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

எனவே, மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயனாளிகளுக்கான கதவு, ஜன்னலுக்கான தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் நபார்டு திட்டத்தின் கீழ்,  கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தார்சாலைகளை புதுப்பிக்க, கடந்த ஏப்ரல் மாதம் தார்பேரல்கள் வாங்கப்பட்டன. இந்த தார் பேரல்களை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைத்துள்ளனர். மழை, வெயிலில் நனைந்து பேரல்கள் துருப்பிடித்து சேதமடைந்து வருகிறது. நீண்ட நாட்கள் மழை,  வெயிலில் வைக்கப்பட்டிருந்தால், தாரின் உறுதித்தன்மையும் பாதிக்கப்படும். கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய கதவு, ஜன்னல் மற்றும் தார் பேரல்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kolathur Panchayat ,
× RELATED குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுது